இரட்டைமலை சீனிவாசன்-Rettamalai Srinivasan


தமிழகத்தில் பட்டியலின மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்.

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன்
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 1

இந்திய அளவிலான பட்டியலின மக்களின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதில் தமிழகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதன் பின்னணியில் இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டது. அப்போதே, நவீன சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உள்வாங்கிச் செயல்பட்ட தலைவர்,

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். பட்டியலின மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். “பறையர்” மகாசன சபையைத் தோற்றுவித்து, “பறையன்” என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர் தான் இரட்டைமலை சீனிவாசன் (1860-1945).

இளமைக்காலம்

சீனிவாசன் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் சடையன் என்பவருக்குப் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர். தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.

கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியதால், இவரது குடும்பத்தார் அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர்.

வாழ்க்கை வரலாறு நூல்

இரட்டைமலை சீனிவாசன் 1939 இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30 பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும் அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.

கல்வியும் குடும்பமும்

திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பட்டினியும், பசியும், வறுமையும் கூடவே விரட்டியது. ஆனாலும், பெற்றோருடைய விடா முயற்சியாலும், கல்வி மீது கொண்டிருந்த பேரார்வத்தாலும் தஞ்சையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். குடும்பத்தின் வறுமையினையும் தாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். தமிழகத்திலேயே பட்டியலின மக்களின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.

தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார், 1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர். நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890 இல் சென்னைக்கு வந்தார்.

ஒரு மனிதன் சமுதாயச் சிந்தனையாளராக-சீர்திருத்தவாதியாக-போராட்டக்காரராக-உருவாக அந்த மனிதன் இளமையில் பட்டத் துன்பங்களும், அடைந்த அவமானங்களும், அனுபவித்தக் கொடுமைகளும் காரணமாக அமைகின்றன. இரட்டைமலை சீனிவாசன் தான் பள்ளி, கல்லூரி வாழ்க்கையின்போது அடைந்த துன்பங்களும், சாதிக் கொடுமைகளும் நாளடைவில் பட்டியலின சமுதாய மக்களின் விடுதலைக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டின.

அம்பேத்கர் (ம) பெரியார் ஆகியவர்களுக்கெல்லாம் முன்னோடி

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன்
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 2

டாக்டர் அம்பேத்கர் 3 வயது குழந்தையாக இருந்த பொழுது  இந்த இரட்டைமலை சீனிவாசனார் இங்கு 28/04/1884  தமது தலைமையிலே போராட்டத்தை துவங்கி ஆங்கிலேய அரசாங்கத்திடம் போராடி பட்டியலின மக்களுக்கு பஞ்சமி நிலங்களை பெற்றுத்தந்தவர்

பறையர் மகாசன சபை

இரட்டைமலை சீனிவாசன் 1891 ஆம் ஆண்டு ‘பறையன் மகாஜன சபை’ எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பின் மூலம் பட்டியலின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வைசிராயிடமும், ஆளுநரிடமும் முறையீடு செய்தார்.
இதே காலகட்டத்தில்தான் 1.12.1891-இல் பண்டித அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1892-இல் அதை ஆதிதிராவிட மகாசன சபை எனப் பெயர் மாற்றி, பதிவும் செய்தார்.

அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பறையன் இதழ்

இந்தியர்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்து வதில் இருந்த சிற்சில தடைகள் 1835-ம் ஆண்டு முற்றிலுமாக நீக்கப்பட்ட பின்பு, இங்கு சுயமாய்ப் பத்திரிகைகள் நடத்தும் முயற்சிகள் எழுந்தன. இந்த வகையில் பட்டியல் வகுப்பினரும் பத்திரிகைகளைத் தொடங்கினார்கள். பஞ்சமன், பூலோக வியாசன், சூரியோதயம், மகாவிகடதூதன், திராவிட பாண்டியன் போன்றவை முன்னோடி இதழ்களாகும். இந்த நிலையில்தான் தாங்கள் எப்பெயரால் ஒடுக்கப் படுகிறோமோ அப்பெயராலேயே சுதந்திரம் பாராட்ட வேண்டும் என்னும் அறிவிப்போடு ‘பறையன்’ என்னும் இதழை இரட்டைமலை சீனிவாசன் 1893-ம் ஆண்டு தொடங்கினார். முதலில் மாத இதழாகவும், பின்னர் வார இதழாகவும் 1900-ம் ஆண்டு வரை இந்த இதழ் தவறாமல் வெளியானது. கிராமங்களில் நடைபெற்ற சமூகப் பிரச்சினைகள்கூட இந்த இதழுக்கு எழுதி அனுப்பப்பட்டன. அவற்றுள் பல்வேறு விஷயங்கள் விண்ணப்பங்களாக மாற்றப்பட்டு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறு பட்டியல் வகுப்பினரிடையே அரசியல் உரையாடலைக் கட்டமைப்பதில் இவ்விதழ் பங்காற்றியது.

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன்
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 3

 

அது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் பல்வேறு செயல்பாடுகளிலும் பட்டியல் வகுப்பினர் சார்பாக இரட்டைமலை சீனிவாசன் தலையீடு செய்துவந்தார். எடுத்துக்காட்டாக, ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவதென ஆங்கில அரசாங்கம் முடிவு செய்தபோது, அதை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று இந்திய தேசியவாதத் தலைவர்கள் கோரினார்கள். அது தொடர்பான கோரிக்கை விண்ணப்பம்கூட சில நூறு கையொப்பங்களோடு அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் நடத்தினால் உயர் வகுப்பினர் பங்குபெற்று தங்கள் மீது சாதிபேதம் பாராட்டுவார்கள் என்பதால், அந்தத் தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேண்டும் என்று பல்வேறு பட்டியல் சமூக குழுவினரும் மாற்றுக் கருத்தை முன்வைத்தார்கள். இதில், இரட்டை மலை சீனிவாசனின் பங்கு முக்கியமானது. 1894-ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் 3,412 பேரின் கையொப்பங்களோடு இங்கிலாந்துக்கு எதிர் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. இது தொடர் பாகத் தனிநூலாக எழுதக்கூடிய அளவுக்கு இந்தப் போராட்டங்கள் விரிந்திருந்தன. 1923-க்குப் பின்னர், சென்னை மாகாணச் சட்டப்பேரவை உறுப்பி னராகவும் மேலவை உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. சட்டப்பேரவையில் அவரால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட உரிமைகள் தொடர்பாக அவர் சிறு வெளியீடுகளை வெளியிட்டுவந்தார். அவ்வாறு அவரால் வெளியிடப் பட்டு, இன்றைக்குக் கிடைக்கும் பிரசுரங்கள் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவை.

தென் ஆப்பிரிக்கப் பயணம்

இரட்டைமலை சீனிவாசன் 1900-ஆம் ஆண்டில் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார்.

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 2
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 4

அப்போது காந்தியடிகள் அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் ‘மோ.க.காந்தி’ என்று தமிழில் கையெழுத்து இடக்காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் என்பது வரலாற்றுப் பதிவு!

இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916-இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917-இல் ஆதித் திராவிட மகாசபை எம். சி. இராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது. 1921இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பினார்.

சட்டசபை உறுப்பினர்

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920 இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் பட்டியல் இனத்தில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1937 வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன) இரண்டாவது தேர்தலுக்குப் பின் 19.11.1923-இல் இரட்டைமலை சீனிவாசன், எல். சி. குருசாமி உள்ளிட்ட 10 பேர் (தாழ்த்தப்பட்டோர்) சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். 1920 முதல் 1936 வரை பட்டியல் இனத்தவர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லா நிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.

சட்டமன்ற செயல்பாடுகள்

22.08.1924-இல் சட்ட சபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது.

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன்
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 5

(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,

(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம்மட்டிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத் துறைகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. – சி.பி.காட்டோஸ் அரசுச் செயலாளர்

இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939-இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் வாழ்வியல்(சிவில்) உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.

20.01.1922 இல் எம். சி. இராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் 25.03.1922-இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் சேரிகளுக்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – தாழ்த்தப்பட்டவர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல். சி. குருசாமியும் முன் வைத்தார். இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.

இரட்டைமலை சீனிவாசன் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது. ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்தினார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். எம். சி. ராஜா, சாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும் சட்டசபையில் தமிழிலேயே பேசினார்கள்.

ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு

ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.01.1928இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசனைத் தலைமை ஏற்கும்படி வி. ஜி. வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி. ஐ. முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிகளுக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பெ.மா மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என். சிவராஜ் சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும். இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும். உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. மதுரை பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.)

மது ஒழிப்புத் தீர்மானம்

இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதாக சீனிவாசன் கருதினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929-இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பு

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரிட்டிஷ் நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார். ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் கைக்குலுக்கினர். இரட்டைமலை சீனிவாசன் மட்டும் கைகலக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டு விட்டார். திகைத்து நின்ற மன்னர், ‘ஏன்’?- என்று காரணம் கேட்டார். அப்போது “நான், எங்கள் நாட்டில் ஒரு தீண்டத்தகாதவன்; என்னை நீங்கள் தீண்டக்கூடாது; நான் பறையன்; இந்தியாவில் தீண்டப்படாத சமுதாயத்திலிருந்து வந்தவன்” – என்று கூறினார். தாம் அணிந்திருந்த கோட்டில், ‘இராவ் சாகிப் இரட்டை மலை சீனிவாசன், பறையன்; தீண்டப்படாதவன்’ என்று எழுதி மாட்டிக் கொண்டிருந்தார். மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கை குலுக்க முனைந்தபோது, சீனிவாசன் மறுத்து, தன்னைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார். ஆனால், மன்னரோ அவரை அருகே அழைத்து, கை குலுக்கினார்.

அப்போது மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் “உங்கள் நாட்டில் இப்படிப்பட்டவர்கள் யாராவது கீழே விழுந்துவிட்டால் கூடத் தூக்கிவிட மாட்டார்களா? அவர்கள் சாதியின் பெயரால் அப்படியே கிடக்கத்தான் வேண்டுமா?”-என்று விழி பிதுங்க வினாத் தொடுத்தார். “ஆமாம்; உங்கள் ஆட்சியிலே, இந்தியாவிலே இது தான் நடைபெறுகிறது” என்று பதில் மொழி பகன்றார். மேலும், இந்த வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் பேசுகிறபோது, “தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் தீண்டாமைக் கொடுமை ஒழியும். சட்டமன்றத்திலும், ஆதிதிராவிடர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்” -என்று வலியுறுத்தினார்.
காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் தனக்கிருந்த நட்பைக் கொண்டு இலண்டனில் காந்தியுடன் நேரில் சந்தித்துப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்துவிட முயன்றார். ஆனால் பலன் இல்லை. அம்பேத்கருடன் இணைந்து காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். கடைசி வரையில் அம்பேத்கருடனும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினருடனும் நட்புணர்வுடன் செயல்பட்டு வந்தார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக் கொடுத்த ஆவணம், தாழ்த்தப்பட்ட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்திருந்தது.

ஆலய நுழைவுத் தீர்மானம்

1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார். இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள், தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19 வாக்குகள் நடுநிலையாகவும் இருந்தது. எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்களின் சமய நம்பிக்கைகளை பாதிப்பதாகக் கூறி, இந்தியாவின் தலைமை ஆளுனர் (கவர்னர் ஜெனரல்) ஒப்புதல் அளிக்காததால் இத்தீர்மானத்துக்கு சட்ட ஏற்பு கிட்டவில்லை.

மதமாற்றக் கருத்து

அம்பேத்கர் 1935இல் தான் மதம் மாற வேண்டு என அறிவித்தபோது இரட்டைமலை சீனிவாசன் ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார்.

முரண்களை ஒதுக்கும் வரலாறு

வரலாற்றை எழுதும்போது சம்பந்தப்பட்ட காலத்தின் வெவ்வேறு குரல்கள், முரண்கள் போன்றவற்றை மௌனமாக ஆக்கிவிட்டு ஒற்றை வரலாற்றைக் கட்டியெழுப்பும் முயற்சிகளே பெரும்பாலும் நடக் கின்றன. உடனடி அரசியல் நோக்கங்களுக்காக வரலாறு எழுதப்படுவதால் வரும் தீமைகள் இவை. பட்டியலின அரசியல் வரலாற்றியலிலும் இது போன்ற தருணங்கள் உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடு, வரலாறு பற்றி வெவ்வேறு கருத்து நிலை கொண்ட குழுவினர் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளனர். இரட்டைமலை சீனிவாசனைப் பற்றித் தேடும்போது இந்த அம்சம் பளிச்சிடுகிறது.

மாறுபட்ட அணுகுமுறை

இரட்டைமலை சீனிவாசனின் அரசியல் பயணத்தைக் கவனிக்கிறபோது அவர் பல்வேறு நிலைப்பாடுகள், ஆளுமைகள் சார்ந்து ஊடாடிவந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒடுக்கப்பட்டோரின் சமயம்குறித்து அவருடைய காலத்தின் பிற தலைவர்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை இரட்டைமலை சீனிவாசன் கொண்டிருந்தார். அயோத்தி தாசர் பவுத்தம் தழுவ உதவிய கர்னல் ஆல்காட்டை 1880-களிலேயே சந்தித்து உரையாடிவந்தபோதிலும், சீனிவாசன் பவுத்தம் தழுவவில்லை. பின்னர், அம்பேத்கரோடு தொடர்பு கொண்டிருந்தபோதும் அவருடைய மதமாற்றம் பற்றிய கருத்தோடு சீனிவாசன் இணக்கம் கொள்ளவில்லை. ஆனாலும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மிக மரபுகளைத் தேடுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இதன்படி, பின்னாளில் ஆலயப் பிரவேசம் நடந்தபோது பல்வேறு கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டி, ஆலயப் பிரவேசத்தை ஆதரித்தார். திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந் தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்ப கோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாம் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

1900-ல் சீனிவாசன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அவர் இந்தியாவில் இல்லாத காலத்திலும் அவர் தொடங்கி விட்டுச்சென்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. 1920-களில் இந்தியா திரும்பினார். இந்தக் காலத்தில் நீதிக் கட்சியினரின் தொடர்பு அவருக்கு இருந்தது.

மறைவு:

இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ‘இராவ்சாகிப்’, ‘திவான் பதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது.

இரட்டை மலை சீனிவாசனின் பணியைப் பாராட்டி திரு.வி.க. அவர்கள், ‘திராவிடமணி’ எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 3Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன்
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 6

கொத்தடிமைகளாக வாழ்ந்த மக்களை சுதந்திர மக்களாக்கியவர்!-மூடப் பழக்கங்களில் மூழ்கிப் போனவர்களை சிந்திக்கும் மனிதர்களாகச் செதுக்கியவர்! – இருண்ட உலகில் பயணம் செய்தவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்! ஊமைச் சமுதாய மக்களைப் பேச வைத்தவர்! – உரிமைகளைப் பெற வைத்தவர்!- ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், தத்தளித்துக் கிடந்த மக்களின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர்! தான் உறங்காமல், உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பி உசிப்பியவர்! தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிய ‘உத்தமர் தாத்தா’! அப்பெரியவர் இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 ஆம் நாள் தனது எண்பத்தி ஆறாம் வயதில் இயற்கை எய்தினார்.

இந்திய நடுவண் அரசு, 15.08.2000 இல் இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தது.

One thought on “இரட்டைமலை சீனிவாசன்-Rettamalai Srinivasan

  1. இக்கருத்துளை நமது சமுதாயம்அறிந்துகெ ாள்ள உதவியதற்க்கு நன்றி.படிப்பறிவு இல்லா நபர்களுக்கு எப்படியாவதுொண்டுசேர்க்கவேன்டும்

    Like

Leave a comment