அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban


சாம்பான் வரலாற்றுக் களம்(பகுதி-1)

கண்டனூர் சாம்பான் அ.ஆ.அடைக்கன் கங்காணி

அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban
அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban

’கங்காணி’ என்றால் அனைவரையும் கண்காணிப்பவர் என்று பொருள். ஆங்கிலேயர் காலத்தில் கங்காணிகள் சமூகத்தில் மிகுந்த மதிப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். ஏனெனில் இவர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து வேலை வாய்ப்பினைப் பெற்று மக்களுக்கு வழங்கும் அதிகாரிகளாக விளங்கியுள்ளனர். (employment consultant/agent). இதுவரை வந்துள்ள வரலாற்றுப் பதிவுகளினூடே பல பதிவுகளில், கங்காணி வேலைகள் என்பது உயர் வர்க்கத்தினர் மட்டுமே பார்த்து வந்த வேலை என்றும், அவர்களிடம் பறையர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்தனர் என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் கங்காணி என்பவர் தொழிலாளிகளை மிகவும் கொடூர முறையில் துன்புறுத்தும் அதிகாரிகளாக செயல்பட்டு வந்ததாகவும் வரலாறுகள் பதிவிடுகின்றன.

ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகவும் தொழிலாளிகளிடம் சர்வாதிகாரியாகவும் காண்பித்துக்கொள்ளும் கங்காணி வரலாறுகளைத் தான் இதுவரை படித்துள்ளோம். ஆனால் அய்யா ‘அடைக்கன் கங்காணி சாம்பான்’ வரலாறு இதற்கு நேர் எதிர் மாறாக உள்ளது. இவரது வரலாற்றுக் குறிப்புகளை உற்றுநோக்கும் போது எந்தத் தொழிலாளிகளையும் அடிமைகளாக நடத்திய பதிவுகளோ, சான்றுகளோ இல்லை. மேலும் கங்காணிப் பொறுப்பை உயர்வர்க்கத்தினர் மட்டுமே வகித்திருக்க முடியும் என்ற கட்டமைப்பை தகர்த்து, தலைமைக் கங்காணியாகவும் பணிபுரிந்துள்ளார் என்பதினை இவரது ஆவணங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், கண்டனூர் எனும் கிராமத்தில் ஆகஸ்ட் 2, 1879-இல் ஆண்டி அவர்களுக்கு மகனாகப் பிறந்து, பல தேசங்களையும் பற்பல நகரங்களையும் கிராமங்களையும் சுற்றி, பல தொண்டுகளைப் புரிந்த எங்கள் பாட்டனார் ‘சாம்பான் அடைக்கன் கங்காணி’ அவர்களைப் பற்றி இந்நாடறியச் செய்ய வேண்டும் என்பதாலும் சிவகங்கைப் பகுதியில் வாழ்ந்து மறைந்த சாம்பான்கள் குறித்த வரலாற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தாலும் பல அரிய தகவல்களையும் தரவுகளையும் சேகரித்துள்ளேன். அவற்றை பின்வரும் செய்திகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban 1
அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban 1

அய்யாவின் கோவில் பணிகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருமய்யம் தாலுகா, நெய்வாசல் எனும் ஊரிலுள்ள ஸ்ரீ மாதக நாச்சியம்மன் கோவில் நவம்பர் 1, 1914-ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. அக்கோவிலில் உள்ள ஐம்பொன் சிலைகள் மிகவும் பிரதிட்டை பெற்றது.
ஏனெனில் இந்த ஐம்பொன் சிலைகள் தான் இக்கோவிலில் அம்மனாக காட்சியளிக்கிறன. இதனைத் தான் அனைத்து மக்களும் வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவில் அய்யாவால் கட்டப்பட்டது. இவற்றை அக்கோவிலில் உள்ள கல்வெட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. (கோவில் கல்வெட்டு,1914) இக்கோவில் அருகாமையிலிருக்கும் ஐந்து கிராம மக்களுக்கும் கிராம தெய்வமாக இருந்து வருகிறது. மேலும் அனைத்துச் சமுதாய மக்களாலும் வழிபடப்பட்டு வருகின்றது.

அக்காலங்களில் கோவிலின் முதல் மரியாதை சமூகத்தின் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கெ வழங்கப்பட்டு வந்துள்ளன. இதனடிப்படையில், முதல் மரியாதை அய்யா அடைக்கன் கங்காணி சாம்பாணுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலின் திருவிழாக்களில் இவரது வகையராக்களுக்கு மண்டகப்படி வைக்கப்பட்டுள்ளன. (மண்டகப்படி: கோவில் விழாக்களில் முதல் மரியாதை மற்றும் சிறப்புச் சலுகைகள் ) இவரை அவ்வூரில் ‘எஜமான் அடைக்கன் கங்காணி’ என்று கூப்பிட்டு வந்துள்ளதாக மக்கள் சொல்லவும் ஆவணங்கள் வாயிலாகவும் அறியமுடிகிறது.

ஜனவரி 6, 1917-ஆம் ஆண்டு அவருடைய சொந்த ஊரான கண்டனூரில், பறையர்களுக்கான குலசாமி கோவில் ஒன்றை (கண்டனூர், நாச்சான் கரை பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ஆண்டி அரசுமுகன் கோவில்) கட்டிக் கொடுத்துள்ளார். இந்தக் கோவிலில் இருக்கும் அனைத்து பொருள்களும் அய்யாவால் வழங்கப்பட்டது ஆகும். (கோவில் கல்வெட்டு, 1917)
ஏப்ரல் 14, 1917-ஆம் அண்டு சாலிகிராமம் எனும் ஊரில் (சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா குன்றக்குடி அருகில்) கண்டனூர் அடைக்கன் கங்காணி அவர்களால் சாமியார்மடம் ஒன்று கட்டப்பெற்றுள்ளது. இந்த மடத்தினை கழனிவாசலைச் சேர்ந்த பறையர் சமூகத்தின் சாமியாரே நிர்வகித்து வந்துள்ளார். இம்மடத்திற்கு அய்யா அடைக்கன் கங்காணி பொருளாதர உதவிகள் பல செய்து வந்ததினையும் கல்வெட்டுகள் முலம் அறியமுடிகிறது.

குன்றக்குடி கோவிலென்பது மிகவும் பிரதிட்டை பெற்ற கோவில் தளம். இந்தக் கோவில் விழாவிற்கு வருகைதரும் மக்களும், பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களும் இங்கு தங்கி மடத்தால் வழங்கப்பட்ட அன்னதானத்தை மிகவும் அன்போடும் பரிவோடும் ஏற்று பசியாரிச் சென்றுள்ளார்கள். மற்ற நேரங்களில் இம்மடம் பள்ளிக்கூடமாகவும் செயல்பட்டு வந்துள்ளது. இதில் அருகாமையில் இருக்கும் பறையரின மக்கள் மட்டுமல்லாது அனைத்து சமூகத்தினரும் பயின்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மடம் இடிந்து பாழடைந்த நிலையில் உள்ளது. (மடம் கல்வெட்டு, 1917)
1912-இல் மலேசியா நாட்டில் கப்பார் எனும் பகுதியில் முருகன் கோவில் சாம்பான் அடைக்கன் கங்காணி அவர்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் அந்நாட்டின் மாகாணத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இச்செய்தி அந்நாட்டில் வசிக்கும் பறையர்களால் வாய்மொழியாகக் கூறப்பட்டது. இவர் அந்நாட்டில் கங்காணி வேலை செய்த காலங்களில் கிடைக்கப் பெற்ற வருவாயைக் கொண்டு இதுபோன்ற பொது சேவைகளை செய்து வந்திருக்கிறார் என்று அந்தப் பகுதியில் வேலை பார்த்த மக்கள் கூறுகிறார்கள். இது குறித்த ஆய்வு தொடர்கிறது.
1918-ஆம் ஆண்டு மாத்தூர் சிவன் கோவிலில் தலைமைக் கணக்கராகவும் நிதி ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். இச்செய்தியை இக்கோவிலின் கல்வெட்டு வாயிலாக அறிய முடிகின்றது.

அடைக்கன் கங்காணிக்கு சாக்கைவயல் கிராமத்தில் மாளிகை வீடு ஒன்று இருந்துள்ளது. அம்மாளிகையின் முன்பு பறைத்தாளம், ஆலயமணி, கொம்பு போன்ற அலங்காரப் பொருள்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இங்கு வரும் அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இலவச உணவுகள் மூன்று வேலையயும் வழங்கப்பட்டு வந்ததாக ஊர்ப் பெரியவர்கள் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது. மேலும் அம்மாளிகையில் குருது (காசுப் பெட்டகம்) இருக்குமாம், அந்தக் குருதில் ஒரு கையை உள்ளே செலுத்தி கையில் எவ்வளவு வருகிறதோ அதனை எடுத்துக் கொள்ளலாமாம். அந்தளவிற்கு மிகவும் செல்வந்தராகவும் கொடையுள்ளம் படைத்தவராகவும் இருந்திருக்கிறார். அந்த காலத்திலேயே துரைமார்களுக்கு சமமாக குதிரை வண்டியிலதான் வந்து இறங்குவாரு என்று சாக்கைவயல் கிராம மக்கள் இன்றளவும் அவரைப்பற்றி கூறுவதனை கேட்க முடியும்.

சாம்புப் பணி

சிவகங்கை மாவட்டத்தில் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட பகுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பட்ட பகுதியிலும் சாம்புவப் பறையர்கள் சாம்புப்பணியினை மிகவும் உயரிய பணியாகக் கருதி வந்துள்ளனர். 1791-இல் ‘கண்டனூர் கணக்கன் நாச்சான் அவர்களுக்கு கெளரி வல்லப மகாராஜாவால் கொடுக்கப்பட்ட சாம்பு வேலைக்கான சாம்பான் பட்டம் மிகவும் உயரிய பட்டமாகும். அத்தகைய சிறப்புமிக்க சாம்பான் கணக்கன் நாச்சான் அவர்களின் மறைவுக்குப்பின் அப்பதவியை கைப்பற்றுவதற்கு கடுமையான போட்டிகள் நிலவியிருக்கின்றது.பள்ளத்தூர் மாகாணக் காவல் துணை ஆய்வாளரிடம் ஒரு மனு ஒன்றினைக் அய்யா அடைக்கன் கங்காணி அவர்கள் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது “சாம்புப்பட்டம் கட்டுவது தொடர்பான பட்டயமுறி எங்களிடம் தான் இருக்கிறது (சாம்புப்பட்டம் கட்டுதல் என்பது மிகவும் உயந்த விழாவாகும்). அதற்கான உரிமைகள் அனைத்தும் கணக்கன் நாச்சான் சாம்பான் வகையராவைச் சேர்ந்த எங்களுக்குத்தான் வேண்டும். பள்ளத்தூரில் இருக்கும் சாம்பவர்கள் சாம்பு பட்டத்திற்கு உரிமை கொண்டாட முடியாது. ஆகவே இந்த விழாவினை உடனே நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 7 நாட்டுப் பறையர்கள் மற்றும் (உஞ்சனை, செம்பமாரி, தென்னாரி, இரவுச்சேரி, சாக்கையநாடு, தேர்போகி, பெரியகோட்டை மாகான பறையர்கள் மற்றும் பாளையநாட்டுப் பறையர்கள்-கண்டனூரைத் தவிர) அவர்களுடன் சேர்த்து மொத்தம் 300 பேர் எதிர் மனு தாக்கல் செய்துயுள்ளனர். இவையனைத்தும் அவரது குறிப்புகளிலிருந்து கிடைக்கப்பெற்றது.

சாம்புப் பணி பட்டயத்திற்காக நடந்த உட்சாதிப் பூசலில் அடைக்கண் கங்காணி 1928-ஆம் ஆண்டு சாம்புப் பணிக்கான பட்டத்தினை வென்றுள்ளார். இந்த பட்டத்தினைப் பெற்று ஐந்து (5) ஆண்டுகளுக்கு மேலாக பாளைய நாட்டுத்தலைவராக இருந்தாகவும் ஊர் மக்கள் வாயிலாக அறியமுடிகிறது. ஆனால் இதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை. இன்றளவும் பாளைய நாட்டுப் பகுதிகளில் அனைத்து ஊர்களுக்கும் (கண்டனூர்) பறையரின மக்கள் பாளைய நாட்டு சாம்பானாக திகழ்வதற்க்கு அய்யா அடைக்கன் கங்காணி அவர்களே முன்னோடியாக விளங்கியுள்ளார். இதற்காக பல்வேறு போராட்டங்களும் பொருளாதர செலவுகளையும் செய்து பட்டத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அரசு நிர்வாகப் பணி

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாக அலுவலகத்திலிருந்து பி. ராஜா ராஜேஸ்வரா சேதுபதி அவர்கள், அக்டோபர் 4, 1923-ஆம் நாள் தேதியிட்ட கடிதம் ஒன்றினை அய்யா அடைக்கன் கங்காணி அவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: “அடைக்கன் கங்காணி அவர்களை திருத்தியமைக்கப்பட்ட தேவகோட்டை தாலுகா நிர்வாக உறுப்பினராக நியமித்து உத்திரவிடுகிறேன்” என்று கூறப்பட்டிருந்தது (I have the honour to inform you that government have been pleased to appoint you as a member of the reconstituted Taluk Board member of Devakottai with effect from 15-10-1923)

மார்ச், 7, 1925 வரை தாலுகா நிர்வாக உறுப்பினராக இருந்துள்ளார். அதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளது. அதாவது, Roc. 6999-24-c2, மார்ச், 7, 1925 தேதியிட்ட கடிதத்தினை இராமநாதபுர மாவட்ட நீதிபதியிடமிருந்து அடைக்கன் கங்காணி அவர்கள் பெற்றிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது: ”தாலுகா நிர்வாக உறுப்பினர் என்ற முறையில் துப்பாக்கி வைத்திருக்கிறீர்கள் ஆகையால் உங்களது உரிமத்தினை புதுப்பிக்கவும், துப்பாக்கியில் புதிய குண்டுகளை நிரப்பிக்கொள்ளவும் (loading gun) கால அவகாசம் வழங்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் இவ்வலுவலகத்தில் எத்தகைய பணிகள் செய்தார்? எத்தனை ஆண்டுகாலம் இந்த பொறுப்பில் இருந்தார்? என்ற தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இவர் 1937-ஆம் ஆண்டு வரைக்கும் துப்பாக்கி உரிமம் வைத்திருந்துள்ளார். 1937-ஆம் ஆண்டு இவர் துப்பாக்கி உரிமத்தினை புதுப்பிக்காத (உரிமம் என்:182-12 TPR, Nature of Gun, S.B.B.L) காரணத்தால் அருகாமையில் இருக்கும் காவல் நிலையத்தில் துப்பாக்கியை சமர்ப்பிக்கும்படி மாவட்ட நிர்வாகம் கே.பி. பரஞ்சோதி பிள்ளை, அடைக்கன் கங்காணி, ஸ்ரீரங்க தேவன் ஆகிய மூவருக்கும் டிசம்பர் 15, 1936 அன்று கடிதம் எழுதியிருக்கிறது.

அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban 5
அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban 5

கங்காணிப் பணிகள்

இங்கிலாந்தை மையமாகக் கொண்டு மலேசியாவில் இயங்கி வந்த கோல்கண்டா மலாய் ரப்பர் நிறுவனம் அய்யா கங்காணி அவர்களுக்கு 1920-ஆம் ஆண்டு பிப்ரவரி 28, நாள் தேதியிட்ட ஒரு நற்சான்றிதழ் கடிதம் ஒன்றை அனுப்பிருக்கின்றனர். அதில் கூறியிருப்பதாவது: “நான் இங்கு பணிக்கு சேர்ந்த காலத்திலிருந்தே (1913) திரு.அடைக்கன் கங்காணி அவர்கள் இந்த நிறுவனத்தில் தலைமைக் கங்காணியாக பணி செய்து வந்தார். நான் இவரை நினைத்து மிகவும் பெருமிதம் கொள்கிறேன்.

இவர் பணியாளர்களை நிர்வகிப்பதில் மிகவும் திறமையுடனும் நேர்த்தியாகவும் செயல்பட்டு வந்தார். இவர் மிகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொண்டார். இவரது செயலுக்கும், சொல்லுக்கும் எந்தவித வித்தியாசமும் இருக்காது. எனக்கு தமிழ்மொழியை எளிதில் பேசுவதற்கு கற்றுக் கொடுத்து ஒரு ஆசிரியராகவும் செயல்பட்டார். மேலும் இவர் எனக்கு சின்ன துரை போல் காட்சியளித்தார். தற்போது இவர் இந்த ரப்பர் தொழிற்சாலையை விட்டு தன் தாயகத்திற்கு செல்கிறார் இனி திரும்ப வரமாட்டார் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது” என்பதாகும். அய்யா அவர்கள் தலைமைக் கங்காணியாக செயல்பட்டதில் பறையர்களுக்கே உரித்தான நேர்மையையும் நியாயத்தினையும் காண முடிகின்றது. இவர் மலேசியாவில் சம்பாதித்த பெருமளவிலான தொகையினை கோவில் கட்டுவதற்கும் கல்விப்பணி மேற்கொள்வதற்கும் மட்டுமே செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அய்யா அடைக்கன் கங்காணி அவர்கள் மலேசியாவிலிருந்து திரும்பிய பின்பு தமிழகத்தில் இருந்து கொண்டே தொடர்ந்து மலேசியாவிற்கு பணியாட்களை அனுப்பியிருக்கிறார். கோல்கண்டா மலாய் ரப்பர் நிறுவனத்தின் மேலாளர், 9 ஜீலை 1937-இல் வேலைக்கு ஆள் கேட்டு ஒரு கடிதத்தினை அய்யாவிற்கு அனுப்பியிருக்கிறார். இதற்குப் பதிலாக அய்யா கங்காணி அவர்கள் திடிரென்று பணியாட்களை தற்சமயம் அனுப்ப இயலாது என்று பதில் கடிதம் ஒன்றை அவர்களுக்கு எழுதியிருக்கிறார்.

கோல்கண்டா மலாய் ரப்பர் நிறுவனத்தின் மேலாளர், இதற்கு இன்னொரு கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார் அதில் கூறியிருப்பதாவது: “நீங்கள் உங்களது நாட்டிலிருந்து பணியாட்கள் குறைவாக இருப்பதனால் தற்போது அனுப்ப முடியாது என்று கூறுவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. பணியாட்கள் கிடைக்கும்போது அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்று எழுதியுள்ளார். இவர் மலேசியாவிலிருந்து தாயகம் வந்த பின்பும் கங்காணித் தொழிலை மேற்கொண்டுள்ளார் என்பதினை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது

அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban 3
அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban 3

கல்விப்பணிகள்

இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அய்யா அடைக்கன் கங்காணி அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் ஆன்மீகம் போன்றவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் தந்துள்ளார் என்பதினை அறிய முடிகிறது.
அருட்தந்தை யுனோ ஆலம்கிரின் (Rev.Uno Almgren), (திருப்பத்தூர் வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்) அவர்களிடமிருந்து 20.08.1917 ஒரு கடிதம் அய்யாவிற்கு கிடைக்கப்பெற்றது. அதில் அருட்தந்தை அவர்கள் கங்காணியிடமிருந்து ரூ.200ஐ கல்விக்கான நன்கொடையாக பெற்றுக் கொண்டதற்கு நன்றியையும் மேலும் தங்களுக்கு பள்ளி கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்தமைக்கு நன்றியையும் தெரிவித்திருந்தார். (It is me a great pleasure to certify that I have received this pay Rs.200-two hundred from Adaikkan kangaani for educational purpose. It’s a very big amount for the education. He has promised to build a school for his caste people in Sivagangai).

அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban 2
அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban 2

அய்யா அவர்கள் மிகவும் நேர்மையாகவும் விவேகமாகவும் தனது பணிகளைச் செய்து வந்துள்ளார். அருட்தந்தைக்கு ஒப்புதல் கொடுத்தபடி பள்ளி அமைத்துக் கொடுத்தார என்பது தெரியவில்லை. அதற்கான ஆவணங்களும் கிடைக்கப்பெறவில்லை.

ஜனவரி 29, 1918-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா சாக்கைவயல் கிராமம், சாக்கோட்டை அருகில் பாடசாலை கட்டப்பட்டுள்ளது. அப்பாடசாலையில் அனைத்து சமூகத்தினரும் கல்வி கற்றிருந்திருக்கின்றனர். மேலும் கல்வி கற்கும் மாணாக்கர்களுக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. இதில் 5 ஆசிரியர்கள் பணியாற்றிருக்கிறார்கள் ( பாடசாலை கல்வெட்டு, 1918). இதுவும் அடைக்கண் கங்காணி அவர்களால் கட்டப்பட்டுள்ளது.

அடைக்கன் கங்காணி அவர்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவர். அவரது பேச்சில் உண்மை இருக்கும். எங்களது பள்ளியில் படிக்கும் கிறுத்தவ மாணவர்களுக்கு உதவி கேட்டு அய்யாவிடம் மனுக்கொடுத்திருந்தோம். எங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்வதாக உறுதியளித்தார் என்று திருப்பத்தூர் வட்ட தலைமைப் போதகர் அவர்களின் 27.01.1920 தேதியிட்ட கடிதம் வாயிலாக இவரது சாதி மத பேதமில்லாமல் கல்விப்பணி செய்ததினை அறிய முடிகிறது.
இவ்வாறு கல்விக்காக பல அரிய நற்பணிகள் செய்து வந்த அய்யா தனது இறுதி நாட்களில் “The modern Housing Construction & Properties Ltd” என்ற நிறுவனத்தில் ஒரு சாதாரண வாயிற்காப்பாளராக (watchman) வேலை பார்த்துள்ளார்.

அடைக்கன் கங்காணிக்கு அழகப்பா பல்கலைக்கழகம் சார்பாக அழகப்பா செட்டியார் அவர்களால் வழங்கப்பட்ட வேலைக்கான ஆணையை, 15.10.1948 தேதியிட்ட கடிதம் மூலம் அறிய முடிகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் காரைக்குடி செக்காலைப் பகுதியில் வசித்து வந்ததாகவும் அப்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்ததாகவும் அவரின் இறுதிச் சடங்குகள் காரைக்குடி செக்காலை காட்டூரிணி மேட்டில் அவருக்கு இனக்கமான பழனியப்ப செட்டியார் என்ற நகரத்தாரும் மற்ற பிற நகரத்தாரும் சாக்கைவயல் கிராமத்தாரும் இருந்து இறுதிச் சடங்குகள் செய்து அவரது சடலம் எரியூட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த மனிதர் எவ்வாறு மிகவும் எளிய வாழ்க்கைக்குள் வந்தார்? ஏன் வந்தார்? என்று தேடினால் அதற்கான ஆவணங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை

பிறக்கும்போது புகழோடு பிறக்கவில்லை என்றால் இறக்கும் போதாவது புகழோடு இறக்க வேண்டும்” என்ற சொல்லிற்கிணங்க வாழ்ந்த நமது சாம்பான் அடைக்கன் கங்காணி புகழ் திக்கெட்டும் பரவட்டும்.

அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban 4

அடைக்கன் கங்கானி சாம்பான்-Adaikan Kangani Samban 4

(தொடரும் இவரது வரலாற்றுத் தேடல்…மேலும் அடுத்த இதழில் இவரது வழி முன்னோர் கண்டனூர் கணக்கன் நாச்சான் சாம்பான் வரலாறு தொடரும்)